தாவாங்கட்டையைத் தொங்க விடும் தகவல்கள்
- ஒவ்வொரு நாளும் 80 லட்சம் மின்னல்கள் பூமியைத் தாக்குகின்றன. "மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக" என்றெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமலே 80 லட்சம் தடவை பூமியை தொட்டுப் பார்க்கிறது அந்த மின்னல்.
- மின்னலையே மிரட்டிப் பார்த்த மாப்பிள்ளை மொக்கைச்சாமி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ராய் சல்லிவன் (Roy Sullivan) (கி.பி. 1912 - 1983). ஒன்றல்ல, இரண்டல்ல, அந்த மனிதரை 7 முறை மின்னல் தாக்கியிருக்கிறது. பயப்பட வேண்டாம், நம்ம சல்லிவனுக்கு ஆயுசு கெட்டி. 7 முறை மின்னல் தாக்கியும் மனிதர் பிழைத்துக் கொண்டார். அவர் யாரிடமாவது, வாருங்கள் கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம் என்று அழைத்தால், அனைவரும் பின்னங்கால் பிடரி தட்ட ஓடினார்கள். மின்னல் தாக்கி விடுமோ என்கிற பயம்தான்.
- பொதுவாக நமக்கு விக்கல் வந்தால் 5 முதல் 10 வினாடிகள் வரை இருக்கும். அதிகம் போனால் அரைமணி நேரம். சார்லஸ் ஆஸ்பார்ன் (Charles Osborne) (கி.பி. 1894 - 1991) என்ற மனிதருக்கு விக்கல் வந்தது. எத்தனை மணிநேரம் என்று கேட்டால் தவறு. 1922ம் ஆண்டிலிருந்து 1990ம் ஆண்டு வரை விக்கல் எடுத்தது. 68 ஆண்டுகள் விக்கல் எடுத்தே வாழ்ந்திருந்திக்கிறார் சார்லஸ் ஆஸ்பார்ன்.உங்களுக்கு வந்தது விக்கல் இல்லை சார்லஸ், தீராத சிக்கல்.
- கரப்பான்பூச்சிகள் நமது பூமியில் 12 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன. தலையைப் பிய்த்து எடுத்து விட்டால் கூட, தலை இல்லாமல் 15 நாட்கள் உயிர் வாழும். அதன் பின்னர் கூட பசியால் இறந்து போகும், தலையில்லாமல் அல்ல.
- குழந்தைகள் பிறக்கும்போது 270 முதல் 305 எலும்புகளுடன் பிறக்கின்றன. வளர்ந்த பின் 206 எலும்புகள்தான் இருக்கும். பல தாய்மார்கள், தங்கள் குழந்தையைப் பார்த்து "டேய் எலும்பா" என்று அழைப்பதன் அறிவியல் பின்னணி இதுதானோ?
- ஆக்டோபஸுக்கு 9 மூளை, 3 இதயம் இருக்கிறது. மூளையில்லாதவன், இதயமில்லாதவன் என்று யாரும் அவசரப்பட்டு திட்டிவிட முடியாது. என் இதயத்தை ஒருத்திக்குக் கொடுத்து விட்டேன் என்று ஆக்டோபஸும் பொய் சொல்ல முடியாது.
- டார்டிகிரேட் என்ற விலங்குதான் உலகின் எந்த வித பருவ மாற்றத்தையும் எதிர் கொண்டு உயிர்வாழும் ஒரே உயிரினம். விலங்கு என்றவுடன் சிங்கம், புலி, கரடி போல கற்பனை செய்யாதீர்கள். முழு வளர்ச்சியடைந்த டார்டிகிரேட் ஒரு மில்லிமீட்டர் அளவுதான் இருக்கும். வெப்பநிலை எவ்வளவு உயர்ந்தாலும், குறைந்தாலும் டார்டிகிரேட்உயிர் வாழும். பத்து ஆண்டுகள் பட்டினி போட்டாலும் அசராமல் இருக்கும். வேறு கோள்களில் விட்டு வந்தாலும், வெற்றிடத்தில் (Vacuum) விட்டாலும் தெம்பாக சுற்றி திரியும். இவ்வளவு ஏன், நமது பூமியே வெடித்து சிதறினாலும் டார்டிகிரேட்உயிர் வாழும் என்று சொல்கிறார்கள்.
- ஒரு மாற்றத்துக்கு ஆண் குழந்தையை சுமந்தால் என்ன? அறிவியல் வளர்ச்சியில் அப்படி எதுவும் கண்டுபிடித்து விட்டார்களா என்று பதற வேண்டாம். கடல் குதிரை, பைப் மீன்கள் போன்ற சில உயிரினங்களில் ஆண்தான் குழந்தை பெற்றுக் கொள்கிறது. பெண் கடல் குதிரை கருமுட்டைகளை ஆணின் வயிற்றில் இருக்கும் பை போன்ற அமைப்புக்குள் தள்ளிவிட்டு கிளம்பி விடும். குட்டி போட வேண்டியது ஆணின் வேலை.
- கடல் குதிரைக்கு உணவை சேமித்து வைக்க வயிறே கிடையாது. சாப்பிட்ட உணவு, உடனே செரிமானமாகி விடும். அதனால் கடல் குதிரை எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் எவ்வளவு சாப்பிட்டாலும் கவலையில்லை, தொப்பை விழாது.
- லூனா என்ற பட்டாம்பூச்சிக்கு வாய் கிடையாது. உணவை செரிக்க உதவும் செரிமான மண்டலங்களும் அதன் உடலில் கிடையாது. வாயே கிடையாது, அப்புறம் எதற்கு செரிமான மண்டலம். நாம் 7 தலைமுறைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் இந்த லூனா மொத்தமே 7 நாட்கள்தான் உயிர் வாழும். அதற்குள் அடுத்த தலைமுறையை உருவாக்கி விட்டு போய் சேர்ந்து விடும்.
- நீச்சல் தெரியாத ஒரே மிருகம் ஒட்டகச்சிவிங்கி. ஆனால் அவ்வளவு பெரிய உருவத்தை வைத்துக் கொண்டு யானை அழகாக நீந்தும். இவ்வளவு குண்டாக இருக்கும் நானே நீச்சல் அடிக்கிறேன், உனக்கு நீச்சல் தெரியாதா என்று ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து யானை கிண்டல் செய்யலாம். ஆனால் ஒட்டகச்சிவிங்கி துள்ளிக்குதித்து ஓடும் யானையால் குதிக்கவே முடியாது.
- தேடி அலைந்து தேனைக் கண்டுபிடித்த தேனீ, கூட்டுக்கு அருகில் வந்ததும் தனது வயிற்றை 8 முறை அங்குமிங்கும் ஆட்டும். அந்த நடனத்தில், தேன் இருக்கும் இடம், அதன் தொலைவு முதலிய தகவல்கள் அனைத்தும் அடங்கியிருக்கும். அதனைப் புரிந்து கொண்ட பிற தேனீக்கள், அந்த இடத்துக்குப் போய் தேனை சேகரித்து வரும். இது "Waggle Dance" என்று அழைக்கப்படுகிறது. உலகின் முதல் GPS தேனீக்கள்தான்.
- தேன் 5000 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாது. எகிப்தின் பிரமிடுகளில் 3000 ஆண்டுகளுக்கு முன் மம்மிகளைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட தேன் இன்றும் சாப்பிடுவதற்கு உகந்ததாக இருக்கிறது.
- நியூசிலாந்தில் இருக்கும் குக் நீர்ச்சந்தி (Cook Strait) கப்பல்களுக்கு மிகவும் ஆபத்தான இடம். சற்று வழி தவறினாலும் கப்பல் விபத்துக்குள்ளாகி விடும். ஆனால் அந்த பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க உதவியது ஒரு டால்பின் (Dolphin). அந்த பக்கமாக செல்லும் கப்பல்களுக்கு அந்த டால்பின் வழி காட்டியது. அந்த டால்பின் பெலாரஸ் ஜேக் (Pelorus Jack) (கி.பி .1888 - 1912) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. "SS Penguin" என்ற கப்பலில் பயணம் செய்த ஒருவர், ஒருமுறை பெலாரஸ் ஜேக்கை துப்பாக்கியால் சுட்டு விட்டார். பெலாரஸ் ஜேக் உயிர் பிழைத்துக் கொண்டது, ஆனால் அதற்கு பின்னர் "SS Penguin" கப்பலுக்கு மட்டும் அது வழிகாட்டவில்லை. அந்த கப்பல் விபத்துக்குள்ளானது.
- ஹிடேசபுரோ யூனோ (Hidesaburo Ueno) ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரைச் சேர்ந்த பேராசிரியர். அவர் நாள்தோறும் கல்லூரியிலிருந்து திரும்பும்போது அவரை வரவேற்க அவர் ஆசையாய் வளர்த்த நாய் ஹச்சிகோ (Hachiko), இரயில் நிலையத்தில் காத்திருக்கும். மே 21, 1925 அன்று யூனோ இறந்துபோய் விட்டார். ஆனால் ஹச்சிகோ அவருக்காக இரயில் நிலையத்தில் நாள்தோறும் காத்திருந்தது. ஓரிரு நாட்களல்ல, 9 ஆண்டுகள் 9 மாதங்கள் 15 நாட்கள், ஹச்சிகோ இரயில் நிலையத்துக்கு வந்து போனது, தான் சாகும் வரை. ஹச்சிகோவுக்கு ஜப்பான் முழுவதும் சிலைகள் இருக்கின்றன அதன் நன்றி உணர்விற்காக.
- சனி மற்றும் வியாழன் கோள்களில் மழை பெய்யும். சாதாரண மழையல்ல வைர மழை. உண்மைதான். அங்கு வைர மழை பெய்கிறது, ஆனால் அந்த வைரங்கள் எல்லாம் அந்த கோள்களின் சூட்டில் கரைந்து போகும். வைரம் போச்சே.
- வைர மழையே நமக்கு அதிர்ச்சிதான். ஆனால் நமது பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கோள் (Planet) ஒன்றில், மூன்றில் ஒரு பங்கு முழுவதும் வைரத்தாலேயே ஆனது. கிட்டதட்ட நமது மொத்த பூமி அளவில் ஒரு வைரம் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வளவு பெரியது அந்த வைரக்கிரகம். "என் கிரகம் இந்த பூமியில வந்து மாட்டிக்கிட்டேன்" என்று கரகாட்டக்காரன் கோவை சரளா போல அலுத்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் "55 Cancri E" என்ற பெயர் கொண்ட அந்த கிரகத்தின் வெப்பம் 2100 டிகிரி செல்சியஸ். அந்த வெப்பத்தில் இரும்பே உருகி விடும். நாம் கால் வைத்தால் சாம்பல் கூட மிஞ்சாது.
- தனிமரம் தோப்பு என்ன, காடே ஆகும். பாண்டோ என்ற மரம் நூற்றுக்கணக்கில் தனித்தனி மரமாக வெளியில் தெரியும். ஆனால் அத்தனை மரங்களுக்கும் ஒரே வேர்தான் இருக்கும். அந்த மரத்தின் வேர் நிலமெல்லாம் பரவி, வேரிலிருந்து அங்கங்கே தனித்தனி மரமாக முளைத்து விடும்.
உதவிய நூல்களும் இணையத்தளங்களும்
https://en.wikipedia.org/wiki/Male_pregnancy
https://www.theguardian.com/environment/2014/apr/03/honeybees-fly-further-in-summer-to-find-food-study-shows
http://www.nationalgeographic.com.au/history/honey-in-the-pyramids.aspx
https://en.wikipedia.org/wiki/Hachik%C5%8D
https://www.buzzaboutbees.net/Honey-Bee-Dance.html
https://en.wikipedia.org/wiki/Tardigrade
https://www.bbc.com/news/science-environment-24477667
https://en.wikipedia.org/wiki/Roy_Sullivan
https://www.space.com/18011-super-earth-planet-diamond-world.html
https://en.wikipedia.org/wiki/Pelorus_Jack
https://pandopopulus.com/about/pando-the-tree/
https://priceonomics.com/the-man-who-hiccuped-for-68-years/
கருத்துகள்
கருத்துரையிடுக