எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - மூன்று

மூன்றாம் இடம் நம் பூவுலகில் மூன்றாம் இடத்தைத் தவிர சிறப்பான இடமொன்று இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், சூரியக்குடும்பத்தில் நமது பூமியே மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆகையால் மூன்றாம் இடம் என்பது பூமியின் இடத்தைக் குறிக்கும். விளையாட்டிலோ, படிப்பிலோ மூன்றாம் இடம் கிடைத்தால் பூமியை ஒரு காரணம் சொல்லி மூன்றாம் இடம் பெற்றதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம். தமிழில் சிறுகவிதை முதல் பெரும் காவியம் வரை, துவக்கம் உலகை முன்னிறுத்தி அமைய வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அது தமிழர்களின் உலகம் தழுவிய பரந்த பார்வையைக் காட்டுகிறது. நாமும், மூன்று குறித்தத் தகவல்களைத் திரட்டும்போது, உலகை முன்னிறுத்தித் துவங்குவது சிறப்பு. அந்த சிறப்புடன் மூன்று தொடர்பான தகவல்களுக்குள் நுழைவோம். மூன்று - ௩ தமிழ் எண் மூன்று, கிட்டத்தட்ட உயிர் மெய்யெழுத்து "ங" போல இருக்கும். கடைசியில் வரும் மேல்நோக்கிய கோட்டை நீக்கி விட்டால் அதுதான் எண் மூன்றின் குறியீடு "௩". "ங" மற்றும் பிற மெல்லின எழுத்துக்கள் மூக்கின் உதவியால் உச்சரிக்கப்படுவதால் மூக்கொலிகள் என்று அழைக்க...